Loading...
அமெரிக்க - ஈரான் போர் ஒப்பந்த கெடு இன்றுடன் முடிகிறது: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
அமெரிக்க - ஈரான் போர் ஒப்பந்த கெடு இன்றுடன் முடிகிறது

அமெரிக்க - ஈரான் போர் ஒப்பந்த கெடு இன்றுடன் முடிகிறது: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2026
07:42 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' இன்றுடன் காலாவதியாகிறது. இரு தரப்பிற்குமிடையே முரண்பாடுகள் உச்சமடைந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. கத்தாரும் பாகிஸ்தானும் தூதரக வழிப்பேச்சுவார்த்தைகளை தொடர முயன்றாலும், இரு நாடுகளும் இறங்கி வரத் தயாராக இல்லாததால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) என்றால் என்ன?

பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 17 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த 14 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகள்:

இரு நாடுகளும் உடனடியாக மற்றும் நிரந்தரமாகத் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுதல்.

அடுத்த 60 நாட்களுக்குள் ஐ.நா பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுதல்.

ஈரானுக்கு எதிரான தடைகளைத் தளர்த்தி, 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுகட்டமைப்பு உதவிகளைத் தொடங்குவதுடன், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

ஹார்முஸ் நீரிணையில் உள்ள கடற்படைச் சுரங்கங்களை ஈரான் அகற்றி, 60 நாட்களுக்குக் வணிகக் கப்பல்கள் கட்டணமின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஒப்பந்தம் முறிவு

ஒப்பந்தம் முறியக் காரணம் என்ன?

ஒப்பந்தம் கையெழுத்தான சில வாரங்களிலேயே இரு நாடுகளும் பரஸ்பரம் விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கின.

ஜூலை 7-இல் இந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை முழுமையாகத் தளர்த்த மறுத்துவிட்டார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்கப் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் எச்சரித்தார்.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறித் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், தாமும் ஒப்பந்தக் கடமைகளை நிறுத்தி வைப்பதாக ஈரான் அறிவித்தது.

ADVERTISEMENT

அடுத்து என்ன?

ஒப்பந்தம் காலாவதியானால் என்ன நடக்கும்?

ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதால் ஹோர்முஸ் நீரிணை வழியிலான உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைவராகப் முன்னாள் படைத்தளபதி மொஹ்சன் ரெசாய் நியமிக்கப்பட்டுள்ளதால், ஈரான் தனது ராஜதந்திர நிலைப்பாட்டை மேலும் தீவிரமாக்கும் எனக் கருதப்படுகிறது.

காசா போர் நிறுத்தம், இஸ்ரேலின் அணுஆயுதக் குறைப்பு உள்ளிட்ட கூடுதல் கோரிக்கைகளுடன் ஈரான் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு வரக்கூடும் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT