அதிகரித்த ரஷ்யா-உக்ரைன் போர்: கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிப்பு
ரஷ்யா- உக்ரைன் போர் புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில், உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தது. உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடையும் என்ற அச்சத்தின் மத்தியில், நவம்பர் 20 அன்று எதிர்பார்க்கப்படும் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் குறித்து கிடைக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையைத்தொடர்ந்து, கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தது. "மிகவும் எச்சரிக்கை காரணமாக, தூதரகம் மூடப்படும், மேலும் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக தங்குமிடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தூதரக விவகாரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள், சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தூதரகம் வலியுறுத்தியது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, உக்ரைன் அமெரிக்க வழங்கிய ATACMS ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் செலுத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த உளவுத்துறை எச்சரிக்கை வந்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் துவங்கி கிட்டத்தட்ட 1,000 வது நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட அது மோதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை குறிக்கிறது. ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா "தகுந்த" பதிலடி தரப்போவதாக அப்போது தெரிவித்திருந்தது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரேனிய தாக்குதல்களுக்கு மேற்கத்திய ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுப்பதாக அக்டோபரில் சபதம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், செவ்வாயன்று மேலும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். உக்ரைனுக்கு அதன் எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ உறுப்பினர்களை போரில் நேரடி பங்கேற்பாளர்களாக ரஷ்யா கருத வழிவகுக்கும் என்று மாஸ்கோ நேற்று எச்சரித்தது. இதற்கிடையில், உக்ரைனின் தடுமாறி வரும் போர் முயற்சியை வலுப்படுத்த, உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழங்க பைடன் ஒப்புக்கொண்டார்.