தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர் தாமஸ் லீ
அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் லீ, தனது 78 வயதில் தற்கொலை செய்து கொண்டார். தனியார் பங்கு முதலீடு மற்றும் அந்நிய முதலீட்டின் முன்னோடியாகக் கருதப்பட்ட இவர், தனது மன்ஹாட்டன் அலுவலகத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை நியூயார்க் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வியாழகிழமை(பிப் 23) உள்ளூர் நேரப்படி காலை 11:10 மணியளவில் அவரது ஐந்தாவது அவென்யூ மன்ஹாட்டன் அலுவலகத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸார் அறிவித்தனர். அவரது உடலில் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட அடையாளங்கள் இருந்திருக்கிறது.
வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட: செய்தி தொடர்பாளர்
தாமஸ் லீ, தனது அலுவலகத்தின் குளியலறையில் விழுந்து கிடந்தததை கண்ட அவரது உதவியாளர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், "தலையில் தன்னைத்தானே சுட்டு கொண்ட துப்பாக்கி காயத்துடன் அவர் விழுந்து கிடந்தார்" என்று தெரிவித்திருக்கின்றனர். "டாமின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரைவேட் ஈக்விட்டி பிசினஸில் முன்னோடியாகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் இந்த உலகம் அவரை அறிந்திருந்தது. ஆனால் அவர் ஒரு நல்ல கணவராகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் உடன்பிறந்தவராகவும் நண்பராகவும் இருந்தார். அவர் எப்பொழுதும் மற்றவர்களின் தேவைகளை முன்னிறுத்திய ஒருவராக தான் எங்களுக்கு தெரிந்தார்." என்று தாமஸ் லீயின் குடும்ப நண்பரும் செய்தித் தொடர்பாளருமான மைக்கேல் சிட்ரிக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்