7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்
பிரிட்டனில் 7 பிறந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் செவிலியரின் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள செஸ்டர் மருத்துவமனையின் பிறந்த-குழந்தைகள் பிரிவில் பணியாற்றியவர் லூசி லெட்பி(33) ஆவார். ஜூன் 2015 மற்றும் ஜூன் 2016க்கு இடையில், இந்த செவிலியர் 7 குழந்தைகளைக் கொன்றதாகவும், 6 குழந்தைகளைக் கொல்ல முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையையும் வெவ்வேறு விதமாக இவர் கொன்றதாக கூறப்படுகிறது. காலியான ஊசியின் மூலம் குழந்தைகளின் உடலில் காற்றை செலுத்தியது, இன்சுலின் விஷம் கொடுத்தது, வலுக்கட்டாயமாக குழந்தைகளுக்கு பால் ஊட்டியது போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
லூசி லெட்பி குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்த பிரிட்டன்-இந்தியர்
லூசி லெட்பியின் நடவடிக்கைகள் மற்றும் 7 குழந்தைகளின் வினோதமான மரணம் குறித்து செஸ்டர் மருத்துவமனையின் மருத்துவர் ரவி ஜெயராம் முதன்முதலில் சந்தேகித்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான இவர்தான் இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, லூசி மீது 2020 நவம்பரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது விசாரணை அக்டோபர் 2022 இல் தொடங்கி 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. விசாரனையில் போது, லூசியின் படுக்கையறையில் இருந்து மீட்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் ஒரு நாட்குறிப்பில், "நான் அவர்களை வேண்டுமென்றே கொன்றேன்." என்று அவர் எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மான்செஸ்டர்-கிரவுன் நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 21) லூசி லெட்பிக்கான தண்டனையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.