உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்ததுள்ளது. எனவே, இதுவரை அமெரிக்க உக்ரைனுக்கு அளித்த இராணுவ உதவி $27.5 பில்லியனாக ஏறியுள்ளது.
உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்ட மேற்கத்திய போர் டாங்கிகள் இதில் இல்லையென்றாலும், 90 ஸ்ட்ரைக்கர் பாதுகாப்பு பணியாளர் கேரியர்கள், 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், அவெஞ்சர் விமான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் இதில் அடங்கும்.
"இந்த தொகுப்பில் வழங்கப்படவுள்ள 59 பிராட்லி ஐஎஃப்விகள், ஜனவரி 6 ஆம் தேதி வழங்கப்பட்ட 50 பிராட்லிகள் மற்றும் 90 ஸ்ட்ரைக்கர் ஏபிசிக்களுடன் சேர்த்தால் உக்ரைனுக்கு இரண்டு கவச பாதுகாப்பு திறன் கொண்ட படைப்பிரிவுகள் கிடைக்கும்" என்று அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன்
ராணுவ உதவி செய்த பிற நாடுகளின் தகவல்
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட $3 பில்லியனுக்கும் அதிகமான தொகுப்பில் 50 பிராட்லிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவும் பிற நாடுகளும் உக்ரைனுக்கு பல பெரிய அளவிலான பாதுகாப்பு வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன. ஆனால் பிரிட்டனைத் தவிர வேறு எந்த நாடும் நவீன மேற்கத்திய டாங்கிகளை வழங்க உறுதியளிக்கவில்லை.
பிரிட்டன் கடந்த வார இறுதியில் சேலஞ்சர் 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.
ஜெர்மனி கடந்த வாரம் மார்டர் பாதுகாப்பு வாகனங்களை வழங்குவதாக கூறி இருக்கிறது.
பிரான்ஸ் AMX-10 RC லைட் டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பராமரிப்பு மற்றும் பயிற்சியில் உள்ள சிரமங்கள் காரணமாக உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை வழங்கத் தயங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.