உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி
உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் மூன்று முக்கிய பிரமுகர்கள் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி(42) தனது முதல் துணை அமைச்சர் மற்றும் மாநில செயலாளருடன் உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி 08:30 மணியளவில்(06:30 GMT) ப்ரோவரியில் ஹெலிகாப்டர் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SBU மாநில பாதுகாப்பு சேவையானது இந்த விபத்துக்கு பல சாத்தியமான காரணங்கள் இருப்பதாக கூறி இருக்கிறது, இதில் நாசவேலை, தொழில்நுட்ப கோளாறு அல்லது விமான விதிகள் மீறல் ஆகியவை அடங்கும். ஒரு மழலையர் பள்ளி கட்டிடம் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. அதனால், அந்த கட்டிடம் மோசமாக சேதமடைந்து புகையால் கருகி விட்டது.
உக்ரைன் அரசாங்கத்திற்கு விழுந்த பெரும் அடி
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நீண்டகால அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கி, உக்ரேனிய போரில் உயிரிழந்ததிலேயே மிகபெரும் தலைவராக கருதப்படுகிறார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது அமைச்சர் தீவிரமாக போர் நடக்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. போரின்போது பாதுகாப்பைப் பேணுவதும், காவல்துறையை இயக்குவதும் உள்துறை அமைச்சகத்தின் இன்றியமையாத பணியாக இருப்பதால், அமைச்சரின் மரணம் அரசாங்கத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் காணொளி மூலம் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர், "போர் நேரத்தில் விபத்துகள் என்பது கிடையாது. இவை அனைத்தும் போர் முடிவுகள் தான்" என்று தெரிவித்திருக்கிறார்.