பிரிட்டனில் சர்வதேச மாணவர்களுக்குப் பேரிடி: ஆயிரக்கணக்கான விசா விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை வாய்ப்புகள் ரத்து
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய சேர்க்கை வாய்ப்புகளை பெருமளவில் ரத்து செய்து வருகின்றன. பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மாணவர் விசா வழிகாட்டுதல்களை கடுமையாக்கியுள்ளதும், உரிம இழப்பு பயமுமே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, இதற்கு முன்னர் ஒரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச விசா நிராகரிப்பு விகிதம் 10%ஆக இருந்தால் மட்டுமே அந்த நிறுவனம் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கத் தடை விதிக்கப்படும். ஆனால் தற்போது இந்த வரம்பு 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்கள்
பாதிக்கப்பட்ட நாடுகளும் விசா புள்ளிவிவரங்களும்
இந்த விசா கெடுபிடிகளால் பாகிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் இந்திய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்ல விண்ணப்பித்து ரத்து செய்யப்பட்ட விசாக்களின் விகிதம் கடந்த ஆண்டின் 1.2 சதவீதத்தில் இருந்து தற்போது 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்களின் விசா ரத்து விகிதம் 40.9 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், சுமார் 15 பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பாகிஸ்தானில் இருந்து மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தியுள்ளன.
நைஜீரிய மாணவர்களின் ரத்து விகிதம் 22.7 சதவீதமாகவும், பங்களாதேஷில் 23.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
குற்றச்சாட்டு
பல்கலைக்கழகங்களின் குற்றச்சாட்டுகள்
சண்டர்லேண்ட் மற்றும் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் கூறுகையில், விசா நேர்காணலின் போது அதிகாரிகள் மிகவும் அடிப்படையற்ற காரணங்களைக் கூறி விசாக்களை நிராகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆராய்ச்சிப் படிப்பான PhD-க்கு பாடத் தாள்கள் இல்லை என்ற காரணத்திற்காகவும், பல்கலைக்கழகம் இருக்கும் நகரத்தின் அமைவிடம் குறித்த தவறான புரிதல்களினாலும் விசாக்கள் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.