பிளைதுபாய் சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தின் காக்பிட்டில் வைத்து, அதை விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட அடுத்த நாளே, அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த ஆலோசகரான அன்வர் கர்காஷ் இந்த முக்கிய அறிவிப்பைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
பைலட்டிற்குப் பாராட்டு
இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு அமீரக உயர்மட்டப் பாராட்டு
தனது பதிவில் இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சாரை வெகுவாகப் பாராட்டிய அன்வர் கர்காஷ், "ஒரு ஆபத்தான பயங்கரவாத செயலையும் மாபெரும் பேரழிவையும் எதிர்கொண்ட போது, கேப்டன் ஸ்மித் மச்சார் துணிச்சலுக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் உண்மையான இலக்கணமாகத் திகழ்ந்தார்.
இருண்ட சூழலிலும் அவர் வெளிப்படுத்திய தொழில்முறையும், தர்ம உணர்வும் அவரை ஒரு உண்மையான கதாநாயகனாக மாற்றியுள்ளது.
174 உயிர்களைக் காப்பாற்றிய அவருக்கு அனைத்துக் கௌரவங்களும் சேர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
சவுதி அரேபியாவில் முகாமிட்டுள்ள பன்னாட்டு விசாரணை அமைப்புகள்
தற்போது சவுதி அரேபியாவின் தபூக் நகரில் கைதாகியுள்ள ஓமன் நாட்டு சக விமானியிடம், இந்த சதிக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமீரகத்தின் கொடியை ஏந்திச் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததால், சர்வதேச சட்டங்களின்படி விசாரணை நடத்தும் முழு அதிகாரம் அமீரகத்திற்கு உள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளும் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்து விசாரணையில் உதவி வருகின்றனர்.
தீவிரவாதம் முதல் மனநல பாதிப்பு வரை அனைத்துக் கோணங்களிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.