
ட்விட்டரின் மதிப்பு குறைந்திருக்கிறதா.. எலான் மஸ்க் சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான ஃபிடெலிட்டி, தங்களுடைய ட்விட்டர் பங்குகளின் மதிப்பு குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தாங்கள் வைத்திருக்கும் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு, அதனை வாங்கிய மதிப்பில் இருந்து 44% ஆகக் குறைந்ததாகக் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் மற்றும் பிப்ரவரியிலும் தங்கள் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம். தற்போது மீண்டும் அதன் மதிப்பு குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
எலான் மஸ்க்கும் ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதாக தெரிவித்திருக்கிறார். மேலும், ட்விட்டரை அவர் வாங்கிய போதிருந்த மதிப்பை விட தற்போது மூன்றில் ஒரு பங்கு மதிப்பை மட்டுமே அந்நிறுவனம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
ட்விட்டர்
எலான் மஸ்க்கும், ட்விட்டரும்:
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்த அந்நிறுவனத்தின் நிதிநிலை மோசமாகவே இருக்கிறது. 13 பில்லியன் டாலர்கள் கடனுடன், எலான் மஸ்க்கின் அதிரடியான முடிவுகளும் ட்விட்டரின் விளம்பர வருவாயை 50% வரை குறைத்திருக்கின்றன.
வருவாயைப் பெருக்குவதற்காக அவர் அறிமுகப்படுத்திய ட்விட்டர் ப்ளூ கட்டண முறையும் பயனர்களிடம் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றும், அந்த திட்டம் தோல்வியடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
ட்விட்டரை வாங்க 25 பில்லின் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்திருந்தார் எலான் மஸ்க். தற்போது ட்விட்டரில் அவருடைய முதலீட்டு மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ட்விட்டரின் மதிப்பு குறைந்தாலும், டெஸ்லா பங்கின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.