அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த தென் கொரியா: ஆத்திரமடைந்த ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
ஈரானை அணுஆயுதமற்ற நாடாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு உதவி செய்ய தென் கொரியா மறுத்துவிட்டதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதற்கு பதிலடியாக தென் கொரியாவுடன் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு ராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். தமது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஈரானிய அணுசக்தி திட்டத்திற்கு எதிரான அமெரிக்க -இஸ்ரேலிய நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு தென் கொரிய அதிபரிடம் சமீபத்தில் கோரியதாகவும், ஆனால் அதற்கு தென் கொரியா "வேண்டாம், நன்றி" எனக் கூறி நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு சர்வதேச கூட்டாளிகளின் ஆதரவை திரட்டி வரும் வேளையில், தென் கொரியாவின் இந்த முடிவு ட்ரம்பிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கூட்டுப் பயிற்சி
'உல்ச்சி ஃபிரீடம் ஷீல்ட்' கூட்டுப் பயிற்சி சுருக்கம்
தென் கொரியாவின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறவிருந்த ஆண்டின் முக்கியக் கூட்டு ராணுவப் பயிற்சியான'Ulchi Freedom Shield' பயிற்சியை முழுமையாக ரத்து செய்ய முடியாத சூழலில், அதன் அளவை "கணிசமாகக் குறைக்குமாறு" பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவுடனான போர்ப் பயிற்சியைக் குறைப்பதற்கு மற்றொரு காரணத்தையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடன் தமக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது. அதிக செலவு பிடிக்கும் இந்த ராணுவப் பயிற்சிகள், வடகொரியாவிற்கு தேவையில்லாத 'பகைமை உணர்வையும் தவறான சமிக்ஞையையும்' அனுப்புகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் வடகொரியா அச்சுறுத்தலின்றி மரியாதையுடன் நடந்து கொண்டதாக ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.