'ஒரே மணிநேரத்தில் ஜெயித்துவிட்டோம்': ஈரானை வீழ்த்தியதாக டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகத் தனது ஆதரவாளர்கள் மத்தியிலான கூட்டத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார். "நாங்கள் வென்றுவிட்டோம். போர் தொடங்கிய ஒரே மணிநேரத்தில் வெற்றியை எட்டிவிட்டோம், போர் முடிவுக்கு வந்துவிட்டது." என்று அவர் தெரிவித்துள்ளார். வெற்றியைப் பிரகடனம் செய்த அதே வேளையில், "எங்களது மிஷனை நாங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம், ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். "ஈரானை அமெரிக்கா ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிட்டது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் இதே போன்ற சூழலுக்கு நாங்கள் திரும்ப விரும்பவில்லை." என்று தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான நியாயத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தகட்ட நகர்வு
டிரம்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
ஆக்சியோஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் இப்போது இலக்குகளே மிஞ்சவில்லை. நான் எப்போது விரும்புகிறேனோ அப்போது இந்தப் போர் முடிவுக்கு வரும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஈரானுடனான போர் ஒரு பின்னடைவாக அமையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த 'வெற்றிப் பிரகடனம்' ஒரு வெளியேறும் உத்தியாக இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் ஏவுதளங்களில் சுமார் 80 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டதாக டிரம்ப் கடந்த 9 ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம்
ஈரானின் பதிலடி மற்றும் போர் நிறுத்தம்
டிரம்ப்பின் இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், "அதிபர் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்றதாக அறிவித்தாலும், இந்தப் போர் முடிவுக்கு வராது." என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா இனி எப்போதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்ற நிரந்தர ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இதுவரை அமெரிக்கா முன்வைத்த இரண்டு போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.