ராணுவ விமானத்தில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கிய டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை, இந்தியாவிற்கு நாடு கடத்தத் தொடங்கியுள்ளதாகவும், திங்களன்று ஒரு இராணுவ விமானம் அவர்களை ஏற்றிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
C-17 ரக ராணுவ விமானம் புலம்பெயர்ந்தோருடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள்
ஆவணமற்ற குடியேறிகள் 1.5 மில்லியன் நபர்களில் கிட்டத்தட்ட 18,000 இந்திய நாட்டினர்
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் பதயேற்கும் முன்னரே உறுதியளித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) நாடு கடத்தப்படுவதற்காக 1.5 மில்லியன் நபர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளது.
அவர்களுள் கிட்டத்தட்ட 18,000 இந்திய நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போது புறப்பட்ட விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சுமார் 725,000 சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடாரை தொடர்ந்து சட்ட விரோத குடியேறிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக அமைகிறது.