கனடா மீதான வர்த்தகப் போரை அதிகரிக்கும் அமெரிக்கா: கூடுதலாக 10% வரி விதிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவிற்கு கனடாவிற்கும் இடையேயான வர்த்தக பதட்டங்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (அக்டோபர் 25) கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த புதிய வரி ஏற்கனவே உள்ள வரிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு கூர்மையான சரிவைக் குறிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்திற்கு எதிரான ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரம் தொடர்பாக கனடா அரசாங்கம் விரோதமான செயலில் ஈடுபட்டு உண்மைகளைத் தீவிரமாக தவறாக சித்தரித்தது என்று அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ரொனால்ட் ரீகன்
ரொனால்ட் ரீகன் வார்த்தையை திரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், சுங்க வரிகள் குறித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் வார்த்தைகளைத் திரித்துக் காட்டிய மோசடியான விளம்பரம் ஒன்றை கனடா வெளியிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒன்டாரியோ மற்றும் நியூஸ்மேக்ஸ் போன்ற அமெரிக்க ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரம், டிரம்பின் வரிக் கொள்கைகளை விமர்சிக்க ரீகனின் 1987ஆம் ஆண்டு உரையில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்தியது. இந்த உரைப்பகுதிகள் அனுமதியின்றி சூழலில் இருந்து எடுக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ரொனால்ட் ரீகன் பிரெசிடென்ஷியல் ஃபவுண்டேஷன் உறுதிப்படுத்தியதுடன், இந்த விளம்பரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது. இதற்கிடையே, புதிய வரி விதிப்பு இருந்தபோதிலும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க கனடா தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.