குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ
டோக்கியோ அரசாங்கம் இளம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் வரலாற்று ரீதியாக குறைந்த கருவுறுதல் விகிதங்களை உயர்த்துவதற்காகவும் தனது ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே, பெருநகர அரசாங்கத்தின் ஊழியர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க முடியும் என்று அறிவித்தார். "வளைந்து கொடுக்கும் தன்மையுடன், பிரசவம் அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் காரணமாக யாரும் தங்கள் தொழிலை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்ய பணி முறைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்," என்று அவர் டோக்கியோ பெருநகர சட்டசபையின் நான்காவது வழக்கமான அமர்வில் கொள்கை உரையில் கூறினார்.
மக்கள் தொகையை அதிகரிக்க தொடர் நடவடிக்கையில் ஜப்பான் அரசு
ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த தருணத்தில், புதிய கொள்கையானது தம்பதிகளை பெற்றோராக ஆக்குவதை ஊக்குவிக்கிறது. சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இளைஞர்கள் குடும்பங்களைத் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் அது வெறும் 1.2 குழந்தைகளாகக் குறைந்தது. மக்கள் தொகை சீராக இருக்க, அந்த எண்ணிக்கை குறைந்தது 2.1 ஆக இருக்க வேண்டும். டோக்கியோ கவர்னர் Koike ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். அதன்படி, ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியாக, சீக்கிரமாக ஆபீஸ் விட்டு வெளியேறும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும்.
குறையும் ஜப்பானின் பிறப்பு சதவீதம்
சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின்படி, ஜப்பானில் கடந்த ஆண்டு வெறும் 727,277 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஜப்பானில் அதிக நேர வேலை செய்யும் கலாச்சாரம், குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், வேலை செய்வதற்கும் இடையே அடிக்கடி பெண்களைத் தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. அறிவிக்கப்பட்ட புதிய ஏற்பாடு மூலமாக டோக்கியோ பெருநகர அரசாங்கத்தின் 160,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும். நான்கு நாள் வேலை வாரம் அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பங்களுடன் செலவிட அதிக நேரத்தை வழங்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.