இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவித்த தாய்லாந்து; ஜனவரி 1 முதல் இ-விசா, 60 நாட்களுக்கு விலக்கு
தாய்லாந்து, ஜனவரி 1, 2025 முதல் மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், சுற்றுலா மற்றும் குறுகிய வணிக நோக்கங்களுக்காக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 60 நாள் விசா விலக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும். ஒரு அறிவிப்பில், தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள் அனைத்து விசா வகைகளுக்கும் https://www.thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தாய்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
விசா விண்ணப்பங்களுக்கான நேரம், கட்டண விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்களாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விசா விண்ணப்ப செயல்முறை ஆஃப்லைன் கட்டண விருப்பங்களை உள்ளடக்கியிருக்கும். கட்டண முறைகள் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் தூதரகங்களால் வழங்கப்படும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் விசா கட்டணங்கள் திரும்பப்பெறப்படாது என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. விசா விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரம், விசா கட்டணம் பெறப்பட்ட நாளிலிருந்து 14 வேலை நாட்களுக்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய முறையின் கீழ் வழக்கமான விசாக்களைப் பெற விரும்புவோருக்கு, டிசம்பர் 16ஆம் தேதிக்குள், சாதாரண பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்பங்கள் நியமிக்கப்பட்ட விசா செயலாக்க நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். தூதரக மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மின்னணு பயண அங்கீகாரம், நன்மைகள் மற்றும் அபராத விவரங்கள்
ETA ஒற்றை நுழைவை அனுமதிக்கும் மற்றும் 60 நாட்கள் வரை செல்லுபடியாகும். தேவைப்பட்டால், பார்வையாளர்கள் தங்கும் நேரத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்கலாம். ETA உடையவர்கள் சோதனைச் சாவடிகளில் தானியங்கு குடியேற்ற வாயில்களைப் பயன்படுத்தலாம். தங்கள் ETA இல் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பயணிகள் குடியேற்றத்தை விரைவாக பதிவிட முடியும். புதிய அமைப்பு, விசா விலக்கு பெற்ற நாட்டவர்கள் தங்குவதையும் கண்காணிக்கும். அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவை மீறுபவர்கள் தினசரி அபராதம் உட்பட அபராதங்களை சந்திக்க நேரிடும்.