பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை தலிபான் தடை செய்துள்ளாதாக செய்திகள் கூறுகின்றன. இதுபோன்ற இடங்களில் பாலினம் கலக்கப்படுவதாக மத குருமார்கள் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணியாததால் இந்த தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, ஹெராத் மாகாணத்தில் உள்ள பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உணவகங்களுக்கு செல்ல ஆண்களுக்கு தடை இல்லை. ஹெராத்தில் உள்ள துணை மற்றும் நல்லொழுக்க இயக்குநரகத்தின் துணை அதிகாரியான பாஸ் முகமது நசீர், இதை மறுத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு விதிக்கும் புதிய தடை
ஆண்களும் பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹெராத்தில் உள்ள துணை மற்றும் நல்லொழுக்க இயக்குனரகத்தின் தலைவர் அஜிசுர்ரஹ்மான் அல் முஹாஜிர், "ஒரு பூங்கா போல இருந்த இடத்திற்கு உணவகம் என்று பெயரிட்டு ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்தனர். நல்ல வேளையாக அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. மேலும், எங்கள் ஆடிட்டர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் செல்லும் அனைத்து பூங்காக்களையும் கண்காணித்து வருகின்றனர்." என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.