அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன. இதற்கிடையில், ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவருக்கு போட்டியாக இருக்கும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இருவரும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளனர். 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான முக்கியமான நாளாக, மார்ச் 5 ஆம் தேதி கருதப்படுகிறது. இந்நாளில், பெரும்பாலான மாநிலங்கள் ஜனாதிபதியின் தேர்தலுக்கான பிரதிநிதியை தேர்வு செய்யும் நாளாகும். மார்ச் 5 அன்று, 16 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் ஒரு பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
மீண்டும் ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப்
இதுவரை நடைபெற்ற பிரதிநிதிகள் தேர்தலில், அலபாமா, மினசோட்டா, ஆர்கன்சாஸ், கொலராடோ, அயோவா, மைனே, மசாசூசெட்ஸ், வட கரோலினா, ஓக்லஹோமா, டென்னசி, டெக்சாஸ், வர்ஜீனியா மற்றும் வெர்மான்ட் ஆகிய அனைத்து இடங்களிலும், ஜனாதிபதி ஜோ பைடன் எளிதாக வெற்றி பெற்றுள்ளார் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. அதேபோல, அலபாமா, ஆர்கன்சாஸ், மினசோட்டா, கொலராடோ மைனே, மசாசூசெட்ஸ், வட கரோலினா, ஓக்லஹோமா, டென்னசி, டெக்சாஸ் மற்றும் வர்ஜீனியா ஆகிய இடங்களில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.