போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க, இலங்கை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளை பாய்ச்சி அடித்தனர். ஆனால், இதெற்கெல்லாம் அசராத தமிழ் போராட்டக்காரர்கள் பீய்ச்சி அடித்த தண்ணீரில் அங்கேயே நின்று 'ஷாம்பூ' போட்டு குளித்தனர். இந்த போராட்டத்தின் காட்சிகளை தமிழ் கார்டியன் பத்திரிகையாளர் டாக்டர் துசியன் நந்தகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மாட்டு சாணத்தை வீசி பதிலடி
நல்லூரில் நடந்த மோதலின் போது போராட்டக்காரர்கள் காவல்துறை மீது மாட்டு சாணம் கலந்த தண்ணீரை வீசியதையும் தமிழ் கார்டியன் காட்சிகள் காட்டுகின்றன. நல்லூர் அரசடி வீதி - வாய்மன் வீதி சந்திப்பில் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்ற இடத்தில் இலங்கை போலீஸார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கி வீசப்பட்டது. ஆயுதமேந்திய STF வீரர்கள் உட்பட பலத்த இராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்ப்பாளர்கள் முன்னேறி போராட்டம் நடத்தினர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை விடுவிக்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.