இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க
இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் அவரது இடதுசாரிக் கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஹரிணி அமரசூரியாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். நவம்பர் 14 அன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 225 இடங்களில் 159 இடங்களைப் பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் மூலம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அவரது கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, ஏற்கனவே பிரதமராக அவரால் நியமிக்கப்பட்டிருந்த ஹரிணி அமரசூரியா மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற ஹரிணி அமரசூரியா
கடந்த செப்டம்பரில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 24இல் ஹரிணி அமரசூரியாவை காபந்து பிரதமராக நியமித்த அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல் நடக்கும் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது, தேர்தல் முடிந்து அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, ஹரிணி அமரசூரியாவே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 22 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை உருவாக்கியுள்ள அனுரகுமார திஸாநாயக்க, நிதி மற்றும் பாதுகாப்புத் துறையை தன்வசம் வைத்துக் கொண்டார். பல வருட பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் பின்னர், தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் திஸாநாயக்கவிற்கான சவாலான பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.