1983 கருப்பு ஜூலை தமிழர் எதிர்ப்பு வன்முறை குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழு அமைத்தது இலங்கை அரசு
செய்தி முன்னோட்டம்
இலங்கையில் கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கருப்பு ஜூலை வன்முறை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. மகளிர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாவித்ரி பால்ராஜ் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்தும், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது குறித்தும் இக்குழு அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும் என்றும், இதில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
3,000 தமிழர்கள் படுகொலை
30 ஆண்டுகால உள்நாட்டு போரின் பின்னணி
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை நாடு முழுவதும் வெடித்த 'கருப்பு ஜூலை' கலவரத்தில் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்களுக்குத் தனிநாடு கோரி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இணை அரசாங்கத்தை நடத்தி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பை, சுமார் 30 ஆண்டுகால மோதலுக்குப் பிறகு 2009 மே 18-ஆம் தேதி முற்றிலும் வீழ்த்தியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
இந்த நீண்டகால மோதலில் 27,000 வீரர்கள் உயிரிழந்த நிலையில், குறிப்பாக 2006 ஜூலையில் தொடங்கிய இறுதிக்கட்டப் போரில் மட்டும் 6,200 ராணுவ வீரர்களும், 22,000 விடுதலைப் புலிகள் அமைப்பினரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.