சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கி இருக்கும் சிங்கள மக்களின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி நேற்று(ஏப் 24) தெரிவித்தார். "சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களுக்குள் அவர்களை மீட்டுவிடுவோம்" என அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.
சூடான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
ஏப்ரல் 15 அன்று சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும் RSF துணை இராணுவக் குழுவிற்கும் இடையே சண்டை வெடித்தது. இதனால் 427 பேர் கொல்லப்பட்டனர். இந்த ராணுவ படையினர் மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகளைத் தகர்த்து, குடியிருப்புப் பகுதிகளை போர்க்களமாக மாற்றியுள்ளனர். சூடான் தலைநகர் கார்ட்டூமில் உணவு மற்றும் தண்ணீரின்றி மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சூடான் ராணுவ படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். வெளிநாட்டவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், பிற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.