தென்னாப்பிரிக்காவில் விடுதியில் புகுந்து ஏகே-47 ரக துப்பாக்கிகளால் சரமாரி சூடு; 17 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில் உள்ள வெடேலா பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சனிக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் இந்த பயங்கரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், முதலில் விடுதிக்கு வெளியே அமைந்திருந்த வாடிக்கையாளர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னர் விடுதியின் உட்பகுதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீதும் ஏகே-47 (AK-47) ரகத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
பலி
17 பேர் பலி; 15 பேர் படுகாயம்
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ அவசர உதவிக் குழுவினர், தாக்குதலுக்கு உள்ளான 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர்.
மேலும், துப்பாக்கிக் குண்டு காயமடைந்த 15 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணிக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடிய 8 மர்ம நபர்களையும் கைது செய்யத் தென்னாப்பிரிக்கக் காவல் துறை (SAPS) தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் தென்னாப்பிரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.