இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் பூர்வீக இல்லம் அருங்காட்சியகமாக மாற்றம்?
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து வளர்ந்த பூர்வீக இல்லம் விரைவில் ஒரு பிரம்மாண்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சொத்தை வாங்கிய இத்தாலியை சேர்ந்த சீக்கியத் தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங், இந்த இல்லத்தை புதுப்பித்து அருங்காட்சியகமாக உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்கான நினைவுப் பொருட்களை பெற அவர் ஆர்வமாக உள்ளார்.
இந்தியன் ஹவுஸ்
மூவர்ணக் கொடியுடன் திகழும் 'இந்தியன் ஹவுஸ்'
இத்தாலியின் விசென்சா மாகாணத்தில் உள்ள லூசியானா பகுதியில் சாம்பல் நிறக் கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டில்தான், 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி சோனியா காந்தி பிறந்து தனது ஆரம்பகால குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.
பிரெசியா நகரிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த வீடு, தற்போது 'இந்தியன் ஹவுஸ்' என்று அழைக்கப்படுகிறது.
வீட்டின் முகப்பில் இந்திய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதோடு, வெளியே 'சோனியா காந்தி பிறந்த இடம்' என்ற பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
பின்னணி
பஞ்சாப் தொழிலதிபரின் நெகிழ்ச்சிப் பயணமும், வீட்டை வாங்கிய பின்னணியும்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயதான சுக்தேவ் சிங் காங், 1992-ஆம் ஆண்டு இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார்.
ஆரம்பக் காலங்களில் பால் பண்ணை, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் கடுமையாக உழைத்து முன்னேறிய அவர், 2020-ஆம் ஆண்டில் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீட்டை வாங்கினார்.
இந்த வீடு ஒரு இந்தியர் மற்றும் சீக்கியக் குடும்பத்திடம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்ததை அறிந்து இதனை வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து வரி உட்பட ஆண்டுதோறும் சுமார் 1,000 யூரோக்களை இந்த வீட்டின் பராமரிப்பிற்காக அவர் செலவிட்டு வருகிறார்.
சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டை பார்வையிடுவதற்கு வசதியாக பாதுகாவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீவிர அபிமானி
வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க எடுத்த உறுதிமொழி
காந்தி குடும்பத்தின் தீவிர அபிமானியான சுக்தேவ் சிங் காங் மற்றும் அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு ஆண்டும் சோனியா காந்தியின் பிறந்தநாளை பொது நிகழ்வாக கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்கோ அல்லது குருத்வாராவாக மாற்றுவதற்கோ பல வாய்ப்புகள் வந்தபோதிலும், சோனியா காந்தி மற்றும் மைனோ குடும்பத்துடனான வரலாற்றுத் தொடர்பைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றை நிராகரித்ததாக சுக்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்த இல்லத்தை ஒரு நவீன அருங்காட்சியகமாக மாற்றுவதன் மூலம், இத்தாலிக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறும் எனவும், உள்ளூர் கிராமப் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
சோனியா காந்தி குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்பார்ப்பு
தற்போது அமிர்தசரஸுக்கு வருகை தந்துள்ள சுக்தேவ் சிங் காங், சோனியா காந்தி எழுதிய நினைவுக் குறிப்புப் புத்தகம் வெளியான பிறகு அவரது இத்தாலிய வாழ்க்கை குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்து, அவர்களின் தனிப்பட்ட உடைமைகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் குடும்பத்தில் மருமகளாவோம் எனச் சோனியா காந்தி அன்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்பதைப் போலவே, ஒரு நாள் அவரது பூர்வீக வீட்டின் சாவி தன் கைகளில் இருக்கும் எனத் தானும் கற்பனை செய்து பார்த்ததில்லை என சுக்தேவ் சிங் காங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.