இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப்
22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 49 வயதான ஜோசப், தனது தொகுதியில் அதிக மனநலச் சேவைகளை அமைக்க உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள கன்சர்வேடிவ் கோட்டையான ஆஷ்போர்டில் இவர் வெற்றி பெற்றுள்ளார். டோரி பிரமுகர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாமியன் கிரீன் ஆகியோரை தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். "நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் அடி பணிகிறேன். அதனுடன் வரும் பொறுப்புகளை முழுமையாக அறிவேன்." என்று வெள்ளிக்கிழமை தனது ஏற்பு உரையில் ஜோசப் கூறினார்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த சோஜன் ஜோசப்
கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பள்ளி படிப்பை முடித்த ஜோசப், பெங்களூருவில் உள்ள பிஆர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்தார். அதன் பிறகு இங்கிலாந் சென்ற அவர், பொது சுகாதாரத்தில் பன்முகத்தன்மை மற்றும் சேர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஹெல்த்கேர் தலைமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மன மற்றும் உடல் நலச் சேவைகளை வழங்குவதில் அவர் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்று பல வாக்காளர்கள் விவரித்துள்ளனர். அடுத்த வாரம் காமன்ஸில் அவர் பதவியேற்றதும், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான கட்சி இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கும். இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பல முதல்முறை தொழிற்கட்சி எம்.பி.க்கள் இந்த முறை இங்கிலாந்தில் வெற்றி பெற்றுள்ளனர்.