இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். இத்தாலிய அரசாங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் பெர்லுஸ்கோனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இத்தாலியின் தற்போதைய துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி, அவரை "ஒரு சிறந்த மனிதர் மற்றும் ஒரு சிறந்த இத்தாலியன்" என்று கூறியுள்ளார். பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என்று இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், "நான் அவரை மிகவும் நேசித்தேன். பிரியாவிடை சில்வியோ," என்றும் க்ரோசெட்டோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெர்லுஸ்கோனியின் மரணம் வரும் மாதங்களில் இத்தாலிய அரசியலை பாதிக்கும்
1994-95, 2001-06 மற்றும் 2008-11 ஆண்டுகளில் பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு சமீபத்தில் நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது. உயிரிழந்த பெர்லுஸ்கோனியின் 'ஃபோர்ஸா இத்தாலியா கட்சி', பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணியின் ஒரு பகுதியாகும். இதனால், பெர்லுஸ்கோனியின் மரணம் வரும் மாதங்களில் இத்தாலிய அரசியலை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 29, 1936ஆம் ஆண்டு மிலனில் பிறந்த பெர்லுஸ்கோனி, 1994ஆம் ஆண்டு 'ஃபோர்ஸா இத்தாலியா' என்ற இயக்கத்தை உருவாக்கினார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், மே முதல் டிசம்பர் வரை பிரதமராக பணியாற்றினார். அதன் பிறகு, 2001-06 மற்றும் 2008-11ஆம் ஆண்டுகளில் வலதுசாரி கூட்டணி கட்சிகளின் உதவியோடு அவர் மீண்டும் பிரதமரானார்.