'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது'
மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட அதீத தாக்குதலின் வீடியோவால் அமெரிக்கா "அதிர்ச்சி மற்றும் திகிலடைந்துள்ளது" என்று பைடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே பெரும் இனக்கலவரம் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த இனக்கலவரத்தின் போது அம்மாநில பெண்கள் மீது அதிக வன்கொடுமை நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறை வெட்கக்கேடானது'
"மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்த அதீத தாக்குதலின் வீடியோவால் நாங்கள் அதிர்ச்சி மற்றும் திகிலடைந்தோம். இந்த பாலின அடிப்படையிலான வன்முறைச் செயலில் இருந்து தப்பியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நீதியை வழங்க இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்," என்று வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செவ்வாய்கிழமை தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது கூறினார். மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒரு கேட்ட கேள்விக்கு பதிலளித்த பட்டேல் இதை கூறினார். எந்தவொரு நாகரீக சமுதாயத்திலும் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறை வெட்கக்கேடானது என்று பிரதமர் நரேந்திர மோடியே குறிப்பிட்டிருக்கிறார் என்றும் படேல் தெரிவித்தார்.