செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர் கூறினார். செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால், தன்னை ஆட்சியில் இருந்து நீக்க அமெரிக்கா திட்டமிட்டதாக ஹசீனா கூறியதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தீவை பெற்றால் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா செல்வாக்கு பெற உதவியிருக்கலாம் என்று ஹசீனா கூறியுள்ளார். பங்களாதேஷில் வன்முறைகள் அதிகரித்து உயிர்பலி அதிகரிப்பதை விரும்பாததால்தான் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியதாக அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா அறிக்கையின் முழு விபரம்
ஷேக் ஹசீனா வெளியிட திட்டமிட்டு, வெளியிடாமல் போன அறிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. அதில் ஹசீனா, "மாணவர்களின் சடலங்கள் மீது அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர், ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. அமெரிக்காவிற்கு செயின்ட் மார்டின் தீவுகளை கொடுத்திருந்தால் எனது பதவி தப்பியிருக்கலாம். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையுடன் நான் விரைவில் திரும்புவேன். அவாமி லீக் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது. மாணவர்களை ரசாக்கார் என்று அழைத்ததில்லை. அந்த அறிக்கை திரிக்கப்பட்டது." எனக் கூறியுள்ளதாக தெரிகிறது. ஷேக் ஹசீனா அமெரிக்காவை வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.