கனடா ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: பலர் பலி, மருத்துவமனைகளில் அவசரநிலை
செய்தி முன்னோட்டம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வெய்ன்ரைட் ராணுவ பயிற்சி தளத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்களின்படி, நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது எரிவாயுக் குழாயில் குண்டு பாய்ந்து ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், டஜன் கணக்கான வீரர்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பதற்றம்
சூறைக்காற்றால் பரவிய தீ
கனடாவின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ராணுவ பயிற்சி தளங்களில் ஒன்றான வெய்ன்ரைட்டில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்று காரணமாக, தீ மளமளவென தளத்தின் எல்லை வேலிகளைத் தாண்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.
தீயணைப்புப் படையினரின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு தற்போது தீ பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை மிகவும் சிக்கலானதாகவும் தீவிரமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர், தனது நினைவில் இதுபோன்றதொரு கோர விபத்து நிகழ்ந்ததில்லை என வேதனை தெரிவித்தார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியும் இந்த விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டு, பாதிக்கப்பட்ட வீரர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை
மருத்துவமனைகளில் உச்சக்கட்ட அவசரநிலை பிரகடனம்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, எட்மண்டனில் உள்ள ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் கோட் ஆரஞ்ச் என்ற உச்சக்கட்ட பேரிடர் கால நெறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அளவுக்கு மிக மோசமான பேரழிவாக இது உருவெடுத்துள்ளதாக அவசர சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள வெய்ன்ரைட் நகர மேயர் புரூஸ் பக், இந்தத் துயரச் சம்பவம் தங்களது சமூகத்தையே நிலைகுலைய வைத்துள்ளதாகவும், தங்களது பிராந்தியத்தில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு இது என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.