Page Loader
துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வு உணரப்பட்டது.

துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
Feb 06, 2023
07:27 pm

செய்தி முன்னோட்டம்

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது. இதனால், 1,400க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கத்தில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. சிரியாவின் உள்நாட்டுப் போர் மற்றும் பிற மோதல்களில் இருந்து வெளியேறி துருக்கியில் வாழந்து வந்த மில்லியன் கணக்கான மக்கள் நிறைந்த துருக்கிய பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேட் அகமது, "வரலாற்றில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம்" என்று இதை கூறினார். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 560 பேர் இறந்ததாக அரசு ஊடகம் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

துருக்கி

ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை உணரப்பட்ட அதிர்வு

துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களாக துருக்கியின் அதிபராக இருக்கும் இவர் சந்திக்கும் மிக பெரும் பேரழிவு இதுவே. இவர் இந்த பேரழிவை எப்படி சமாளிக்கிறார் என்பதை வைத்தே மே மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலின் வெற்றி அல்லது தோல்வி முடிவு செய்யப்படும் என்ற நிலைக்கு இவர் தற்போது தள்ளப்பட்டிருக்கிறார். ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டன. இன்று பிற்பகல் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு நடுவில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. AFP நிருபர்கள் துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வை உணர்ந்தனர்.