நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மக்களிடையே உரையாற்றும் போது இதை தெரிவித்தார். மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரின் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. துருக்கிக்கு அருகிலுள்ள நாடுகளில் கூட சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. 140 கோடி இந்திய மக்களின் அனுதாபங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இருக்கும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது." என்று கூறினார்.
துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளனர்
அதனபின், இந்தியன் ஆயில் உருவாக்கிய சோலார் சமையல் அமைப்பின் இரட்டை-குக்டாப் மாடலை, இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளையும் உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். "உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்" என்று அவர் தனது ஆதரவை துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லுவுக்கு தெரிவித்துள்ளார்.