300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் மையம் கொண்டிருந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிரியாவின் அரசாங்கப் பகுதிகளில் இன்று(பிப் 6) 237க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சிரிய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 639 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் 237 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒரு உள்ளூர் மருத்துவமனை AFPஇடம், துருக்கிய ஆதரவு பிரிவுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதிகளில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக கூறியது. நாட்டின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 245ஆக உள்ளது.
6.7 ரிக்டர் அளவாக பதிவாகிய இரண்டாவது நிலநடுக்கம்
துருக்கியின் அவசரகால சேவை அதிகாரிகள் முதற்கட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது என்று தெரிவித்திருந்தனர். ஆனால், இது கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நிகழ்ந்த இந்த பேரழிவு, முக்கிய நகரங்களில் டஜன் கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை தரைமட்டமாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு (0117 GMT) சுமார் 17.9 கிலோமீட்டர்(11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு, 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் AFAD அவசரகால சேவை மையம் முதல் நிலநடுக்கத்தின் அளவை 7.4 ரிக்டராக கணித்துள்ளது.