சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
சீனாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போவதாக கூறினாலும், அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்போது சில செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களை அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனமும் மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்ற செயற்கைகோள் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளது. சீனாவில் முன்பு இருந்ததை விட மயானங்கள் மற்றும் ஈமச்சடங்கு மண்டபங்களில் எவ்வளவு கூட்டம் அதிகரித்திருக்கிறது என்பதை இந்த படங்கள் காட்டுகின்றன. பொதுவாக, தமிழகத்தில் வீட்டிலும் மயானத்திலும் வைத்து இறுதி சடங்குகள் செய்யப்படும். ஆனால், சீனா போன்ற நாடுகளில் அதற்காகவே பணம் கொடுத்து மண்டபங்களைப் பிடிப்பார்கள். அந்த மண்டபங்கள் "ஈமச்சடங்கு மண்டபம்" என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தால் திணறும் ஈமச்சடங்கு மண்டபங்கள்
வடக்கு பெய்ஜிங்கிலிருந்து கிழக்கு நான்ஜிங் வரை மற்றும் தென்மேற்கு செங்டுவிலிருந்து குன்மிங் வரையிலான ஆறு சீன நகரங்களுடைய செயற்கோள் படங்கள் இதன் மூலம் வெளிவந்திருக்கிறது. பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் புதிய வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டிருப்பது இந்த படங்களில் தெரிகிறது. குன்மிங், நான்ஜிங், செங்டு, டாங்ஷான் மற்றும் ஹுசோ ஆகிய நகரங்களில் உள்ள ஈமச்சடங்கு மண்டபங்களில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதும் இந்த படங்களில் சுட்டி கட்டப்பட்டுள்ளது. "ஜீரோ கோவிட் பாலிசி" கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து சீனாவில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.