கொரோனா வரவேண்டும் என்று பாதுகாப்பு இல்லாமல் சுத்தும் சீனர்கள்
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் இருந்து தான் பரவியதாக நம்பப்படுகிறது. 2019ஆம் ஆண்டு கடைசியில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று வரை சீனாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனாவை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று சீன அரசு " ஜீரோ கோவிட் பாலிசி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் விதிக்கப்பட்டது. இந்த லாக்டவுனில் மூன்று வருடங்களாக எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், சீனாவில் கொரோனாவும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதனால், கோபம் அடைந்த மக்கள், சீன அரசை எதிர்த்து கட்டுப்பாடுகளை நீக்க கோரி பெரும் போராட்டங்களை நடத்தினர். அதன்பின், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. ஆனால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.
கொரோனா வேண்டும், தடுப்பூசி வேண்டாம்
இதனால், சீனாவின் கொரோனா எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் வெளியே செல்ல வேண்டாம் என்று சீன அரசு எச்சரித்திருந்தாலும், அதை சீன மக்கள் புறக்கணித்து வருவதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சீன அரசு அறிமுகப்படுத்திய தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை இல்லாததால், பலர் தங்களுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக கொரோனா தொற்றை தாங்களே ஏற்று கொள்கின்றனர். நாட்டில் மருத்துவ சேவைகள் எதுவும் சரியாக இல்லாததால், இளைஞர்கள் அனைத்து சுகாதார எச்சரிக்கைகளையும் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டால், வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.