இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின்(IDF) நெட்சா யெஹுடா பட்டாலியன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டித்துள்ளார். மேற்குக் கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் பட்டாலியன் படையினர் நடத்திய மனித உரிமை மீறல்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையாக கருதப்படும் நெட்சா யெஹுடாவை ஜோ பைடன் நிர்வாகம் தடுப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. "இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) மீது பொருளாதார தடை விடிக்கக்கூடாது. எமது வீரர்கள் பயங்கரவாத அரக்கர்களுடன் போராடுகிறார்கள். மேலும் IDF அலகு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நோக்கம் அபத்தத்தின் உச்சம்." என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
"நெட்சா யெஹுடாவின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்": இஸ்ரேல்
நான் வழிநடத்தும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து வழிகளிலும் செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர்கள் இடாமர் பென் க்விர் மற்றும் பெசலேல் ஸ்மோட்ரிச் ஆகியோர் இந்த அமெரிக்க நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளனர். "எங்கள் வீரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது ஒரு சிவப்புக் கோடு" என்று ஜிவிர் கூறியுள்ளார். "இந்த நடவடிக்கை மிகவும் தீவிரமானது என்றும் "நெட்சா யெஹுடாவின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், நெட்சா யெஹுதா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்துள்ளார்.