பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கான் சேர்ப்பா? பின்னணி இதுதான்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சல்மான் கான், சவுதி அரேபியாவின் ரியாத் மன்றத்தில் பேசும்போது பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவரைத் தனது அதிகாரப்பூர்வ பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடக தளங்களில் பரவும் தகவல்கள், பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (1997) கீழ் சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்காணிப்பதற்கான நான்காவது அட்டவணையில் பலுசிஸ்தான் அரசாங்கம் சல்மான் கானின் பெயரைச் சேர்த்துள்ளதாகக் கூறுகின்றன. மேலும், அக்டோபர் 16, 2025 தேதியிட்டதாகக் கூறப்படும் ஒரு அறிவிப்பும் ஆன்லைனில் பரவி, சல்மான் கான் ஆசாத் பலுசிஸ்தான் உதவியாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
சல்மான் கான்
சல்மான் கான் உரையின் பின்னணி
இந்தச் சர்ச்சை, ரியாத் மன்றத்தில் சல்மான் கான் ஆற்றிய உரையிலிருந்து உருவானது. அதில் அவர் இந்தியச் சினிமாவின் செல்வாக்கு மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு வெளிநாட்டினரைப் பற்றிக் குறிப்பிடும்போது பலுசிஸ்தானையும் குறிப்பிட்டார். சல்மான் கான், "சவுதி அரேபியாவில் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள், அவர்களின் காரணமாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன." என்று கூறியிருந்தார். சமீபத்தில் பலுசிஸ்தான் போராளிகள் தங்கம் பகுதியை தனி நாடாக அறிவித்திருந்த நிலையில், அதை அங்கீகரிக்கும் வகையில் சல்மான் கானின் பேச்சு அமைந்திருந்ததாக கருதப்பட்டது. அதற்கு பதிலடியாக இந்த உத்தரவு வந்துள்ளதாக தற்போது கூறப்பட்டாலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்த வெளிப்படையான உறுதிப்படுத்தலும் வெளியிடப்படவில்லை.