அக்டோபரில் ரஷ்யாவிற்கு பேரதிர்ச்சி அளித்த உக்ரைனின் 'ஆபரேஷன் விவால்டி'
செய்தி முன்னோட்டம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 54,000-க்கும் அதிகமான வீரர்களை பலிகொடுத்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. போர் தொடங்கியது முதல் ஒரே மாதத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிக அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 8,170 அதிகரித்துளளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில், அக்டோபர் 21 அன்று ஒரே நாளில் மட்டும் 2,250 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். அக்டோபர் மாதத்தில் மட்டும் உக்ரைன் ராணுவம் 96.2சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்துள்ளது. இது இதே காலத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த 85.8சதுர கிலோமீட்டரை விட அதிகம் ஆகும்.
தாக்குதல்
ரஷ்யாவின் ஏவுகணை ஆலையில் இலக்குத் தாக்குதல்
உக்ரைனின் 'ஆபரேஷன் விவால்டி' என்ற திட்டமிடப்பட்ட எதிர் தாக்குதல் நடவடிக்கை மூலம் இந்த மகத்தான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலையை இலக்கு வைத்து உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவின் பான்ட்சிர்-எஸ்2 மற்றும் எஸ்-400 டிரையம்ப் கட்டுப்பாட்டு வாகனங்கள் சேதமடைந்தன.
இத்தாக்குதலினால் ரஷ்யாவிற்கு 70 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பதிலடி
பதிலடித் தாக்குதல்களும் மின்சார முடக்கமும்
இழப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனின் டினிப்ரோ, வின்னிட்சா, ழிட்டோமிர் மற்றும் கமெல்னிட்ஸ்கி ஆகிய பகுதிகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஒரே வாரத்தில் ரஷ்யா 1,940 ட்ரோன்கள், 1,580 வழிகாட்டப்பட்ட குண்டுகள் மற்றும் 36 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 44 ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால், உக்ரைனில் லட்சக்கணக்கான குடும்பங்கள் மின்சாரமின்றித் தவித்து வருகின்றன.
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 14 லட்சம் முதல் 21 லட்சம் வரையிலான ரஷ்ய வீரர்கள் காயமடைந்தோ அல்லது உயிரிழந்தோ போர்க்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதில் 3.74 லட்சம் முதல் 7.70 லட்சம் வீரர்கள் நேரடியாக கொல்லப்பட்டுள்ளதாகவும் தி எகனாமிஸ்ட் பத்திரிகை மதிப்பீடு செய்துள்ளது.