ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்
ரஷ்ய- உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் போது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். உக்ரைன் போர் தொடங்கிய போது, 18,000 மாணவர்கள் உட்பட, உக்ரைனில் சிக்கித் தவித்த 23,000 இந்தியர்களை இந்தியா வெளியேற்றியது. ஆனால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த நிறைய மருத்துவ மாணவர்கள் படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளனர். பெரும்பாலானவர்கள் ரஷ்ய தாக்குதல்கள் நடக்கும் லிவிவ், உஸ்கோரோட் மற்றும் டெர்னோபில் போன்ற நகரங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கர்கள் போன்ற பிற நாட்டவர்களும் உக்ரைனுக்கு திரும்பியுள்ளனர். மருத்துவ படிப்புகளை முடிப்பவர்கள் நாடு திரும்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின்(NMC) அனுமதி பெற வேண்டும்.
இந்திய கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை
போர் ஆரம்பித்த போது, உக்ரைனில் கல்வி பயின்று வந்த மாணவர்களை மருத்துவர்களாக்க அரசாங்கம் "முடிந்த அனைத்தையும் செய்யும்" என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறினார். உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுகாதார அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. வெளிநாட்டில் பயின்ற மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமளிக்க எந்த விதிகளும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியது. இதனால், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 18,000 மாணவர்களின் நிலை கேள்வி குறியாகி இருக்கிறது. இந்திய கல்லூரிகளில் இடம் கிடைப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவை சமாளிப்பது மிகவும் கடினம் என்பதால் நாடு திரும்பிய மாணவர்களும் அதற்கு முயற்சிக்காமல் இருக்கின்றனர்.