அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா
அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா இடைநிறுத்துவதாக இன்று(பிப் 21) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். மேலும், அவர் மேற்கத்திய நாடுகள் தங்களது மூலோபாய விமானத் தளங்களைத் தாக்கும் முயற்சிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். "அணு ஆயுத ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்திக் கொள்கிறது என்பதை நான் இன்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்," என்று அவர் கூறி இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட மறுநாள் ரஷ்ய அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று(பிப் 20), அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார். அப்போது, ரஷ்ய-உக்ரைன் போருக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக ஜோ பைடன் உறுதியளித்திருந்தார்.
அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?
2010இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமா மற்றும் அப்போதைய ரஷ்ய அதிபர் டிமிட்ரி-மெட்வெடேவ் ஆகியோரால் புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புதிய START ஒப்பந்தம் அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வரம்பிற்குள் கொண்டு வருகிறது. அதாவது, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது. இந்த ஒப்பந்தம் 2011இல் நடைமுறைக்கு வந்தது. பின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு 2021இல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இது நீட்டிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு இரு தரப்பினரும் இணங்குகிறார்களா என்பதை உறுதி செய்ய இருநாடுகளும் ஆய்வாளர்களை நியமிக்கலாம் என்றும் இந்த ஒப்பந்தம் கூறுகிறது.