திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(பிப் 20) உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்க அதிபரின் வருகையை தெரிவிக்கும் விதமாக உக்ரைன் தலைநகர் கீவ் முழுவதும் வான்வழி சைரன்கள் ஒலித்தன. ரஷ்ய படையெடுப்பிற்கு பின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு வருவது இதுவே முதல்முறை. சீருடை அணிந்த உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் வெளியே தெருவில் வரிசையாக நின்று அவரை வரவேற்றனர். பைடனும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் நடந்து சென்று, ரஷ்ய-உக்ரேனியப் போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ரஷ்ய-உக்ரைன் போருக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டை பாதுகாப்பது அமெரிக்காவின் முக்கிய கடமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பைடனின் திடீர் விஜயம்: ஜெலென்ஸ்கி பாராட்டு
"உக்ரேனிய மக்களை வான்வழி குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாக்க உதவும் பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட முக்கியமான உபகரணங்களின் மற்றொரு விநியோகத்தை நான் அறிவிப்பேன்." என்று அவர் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பைடனின் வருகையை ஆதரவின் முக்கிய அடையாளமாக கருதிய ஜெலென்ஸ்கி அதை பாராட்டியுள்ளார். "கீவுக்கு வருக, ஜோசப் பைடன்! உங்கள் வருகை அனைத்து உக்ரேனியர்களுக்கும் ஆதரவின் மிக முக்கியமான அறிகுறியாக இருக்கும்" என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் கூறி இருந்தார். உக்ரேனிய போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்ப சீனா பரிசீலித்து வருகிறது என்ற அமெரிக்க கூற்றுக்கு எதிராக சீனா கண்டனம் தெரிவித்த சமையத்தில் ஜோ பைடன் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.