உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு
போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளுக்கும் தனியார் கூலிப்படை வாக்னருக்கும் வாழ்த்து தெரிவித்தார். உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, G7 தலைவர்களை சந்திக்க ஜப்பானுக்கு சென்றிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் 70,000 மக்களைக் கொண்டிருந்த உப்புச் சுரங்க நகரமான பாக்முத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கின்றன. எனவே, பாக்முத்தை ரஷ்யா கைப்பற்றி இருந்தால், பல அவமானகரமான தோல்விகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு கிடைக்கும் ஒரு முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படும்.
போராளிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர்
பாக்முத் நகரத்தை ரஷ்யா கைப்பற்றிவிட்டால், டான்பாஸின் பல பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அது வழிவகுக்கும் என்று உக்ரேனிய தலைவர் ஜெலென்ஸ்கி முன்பு எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "வாக்னர் தாக்குதல் பிரிவுகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் விளைவாக, ஆர்டெமோவ்ஸ்க் நகரத்திற்கு விடுதலை கிடைத்தது," என்று பாக்முத் நகரத்தின் சோவியத் காலப் பெயரைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. விளாடிமிர் புதின் வாக்னரின் தாக்குதல் பிரிவுகள் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் அனைத்துப் படைவீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் பாக்முத் நகரத்தை தனது படை கைப்பற்றியயதாக கூறினார். அந்த வீடியோவில் ராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்கு இடையில் ரஷ்ய கொடிகளை வைத்திருப்பது தெரிந்தது.