கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த BRICS மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்ஆப்பரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல இன்னல்களுக்கு பின்னர், வரும் ஆகஸ்ட் நடக்கவுள்ள இந்த மாநாடு பிரிக்ஸ்'ன் 15வது உச்சி மாநாடு என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவேண்டிய இம்மாநாட்டில், ரஷ்ய நாட்டின் சார்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என்று அந்நாட்டு அதிபர் புதினின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும்போர் துவங்கியப்பொழுது போரினை நிறுத்த உலகநாடுகள் வலியுறுத்தியது. ஆனால் 2 நாடுகளுமே அதனைக்கேட்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள்.
தென் ஆப்பரிக்காவில் வைத்து புதின் கைது செய்யப்பட்டால் ரஷ்யா மீது போர் பிரகடனம் செய்ததுப்போல் ஆகிடும்
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா அதிபர் புதினை கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதில் தென்ஆப்பரிக்காவும் ஒரு உறுப்பினர் என்று தெரிகிறது. இதனால் புதின் அந்த நாட்டில் இருக்கும் பொழுது, கைது செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு புதினை அந்நாட்டில் வைத்து கைது செய்தால், ரஷ்யா மீது போர் பிரகடனம் செய்ததுப்போல் ஆகிடும் என்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையினை பூர்த்திசெய்யும் பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்குமாறு, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது புதின் நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்னும் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.