'ரூ.400 கோடி சேதம், ஒருவர் பலி! உக்ரைனில் உள்ள இந்திய நிறுவனத்தின் ஆலை மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் இயங்கி வரும் இந்தியாவின் குசும் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து உற்பத்தி ஆலை மற்றும் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்த இந்தத் தாக்குதலில் ஆலையின் முக்கியக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து பெரும் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக நிறுவனத்திற்கு சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் விபரம்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் மற்றும் தாக்குதல் விபரம்
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரே இரவில் உக்ரைன் மீது ரஷ்யா 135 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50-க்கும் மேற்பட்டவை ஜெட் விமான சக்தி கொண்ட அதிநவீன ட்ரோன்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கீவ், டினிப்ரோ, கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் சுமி ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து இந்த பேரழிவுக் கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்திய நிறுவனம்
இந்திய குசும் குரூப் நிறுவனத்தின் வரலாறு
இந்திய தொழிலதிபர் ராஜீவ் குப்தாவால் 1994-இல் தொடங்கப்பட்ட குசும் குரூப் நிறுவனம், உக்ரைன் நாட்டின் சுகாதாரத் துறையில் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் சுமியில் இயங்கி வரும் இந்த ஆலை, 50-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளை உற்பத்தி செய்து உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
முன்னதாக 2025 ஏப்ரல் மாதத்திலும் கீவ் நகரில் இருந்த இந்த நிறுவனத்தின் கிடங்கு ரஷ்ய தாக்குதலால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
போர் தீவிரம்
தீவிரமடையும் போர் மற்றும் சர்வதேசக் கவலைகள்
இந்த ஒரு வாரத்தில் மட்டும் ரஷ்யா 1,900-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 1,700 குண்டுகள் மற்றும் 25 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தனது சொந்தப் தயாரிப்பான எஃப்.பி-7 பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.
உக்ரைனில் உள்ள இந்திய வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்துப் புதுடெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கவலை தெரிவித்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.