இரண்டாம் உலகப்போருக்கு பின் மிகப்பெரிய அழிவு; உக்ரைன் போரில் 4.5 லட்சம் ரஷ்யர்கள் பலி? கசிந்த அதிர்ச்சித் தரவுகள்
செய்தி முன்னோட்டம்
பெலாரஸை சேர்ந்த சைபர்பார்டிசன்ஸ் பி.ஒய். (Cyberpartisans BY) மற்றும் உக்ரைன் ஆதரவு சைலண்ட் க்ரோ (Silent Crow) ஆகிய ஹேக்கர் குழுக்கள், ரஷ்ய ஃபெடரல் மாநில புள்ளியியல் சேவை அமைப்பான ரோஸ்ஸ்டாட் (Rosstat) சேவையகங்களில் புகுந்து சுமார் 23 டெராபைட் தரவுகளைக் கைப்பற்றியுள்ளன. இதில் உக்ரைன் படையெடுப்பு தொடங்கிய 2022 பிப்ரவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த ரஷ்யர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
மனித இழப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கொடூரமான மனித இழப்பு
ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, போர்க்களத்தில் நேரடியாகவும் அதன் விளைவுகளாலும் உயிரிழந்த ரஷ்யர்களின் எண்ணிக்கை 3.93 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகள் நடைபெற்ற சோவியத்-ஆப்கான் போரில் சுமார் 13,000 சோவியத் வீரர்கள் மட்டுமே பலியான நிலை மாறாக, போரில் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா சந்தித்துள்ள மிகப்பெரிய மனிதப் பேரிழப்பாக கருதப்படுகிறது.
ஆண்டுவாரியான உயிரிழப்பு
கணக்கீட்டு முறைகளும் ஆண்டுவாரியான உயிரிழப்பு வளர்ச்சியும்
கசிந்த தரவுகளின்படி, போரின் வீரியம் ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்துள்ளது தெளிவாகிறது.
2022-ல் சுமார் 19,000 ஆக இருந்த உயிரிழப்புகள், 2023-ல் 42,000 ஆகவும், 2024-ல் 1,10,000 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 1,82,000 ஆகவும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளன.
இதில் 30 முதல் 49 வயதிற்குட்பட்ட ஆண்களே அதிக அளவில் பலியாகியுள்ளனர். மேலும், 72% உயிரிழப்புகள் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன.
உண்மைத்தன்மை
போர் தவிர்த்த மரணங்கள் மற்றும் தரவுகளின் உண்மைத்தன்மை
பட்டியலில் நேரடிப் போர் மரணங்கள் மட்டுமன்றி, 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் நோய்கள், தற்கொலை மற்றும் சாலை விபத்துகளால் இறந்துள்ளனர்.
மேலும் 32,000 வீரர்கள் காயம் அடைந்து ஓராண்டிற்குப் பிறகு உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய அரசு 2022 செப்டம்பருக்குப் பிறகு அதிகாரப்பூர்வப் பலி எண்ணிக்கையை வெளியிடாத நிலையில், ஊடகங்கள் மற்றும் சுயாதீன புலனாய்வு அமைப்புகள் இத் தரவுகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வருகின்றன.