தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த நகரமான பெல்கோரோட் மீது ரஷ்ய போர் விமானம் ஒன்று "தற்செயலாக" வெடிகுண்டை வீசியது.
இந்த வெடிகுண்டால் அந்த நகரத்தின் கட்டிடங்கள் சேதமடைந்தன.
"சுகோய் சு-34 விமானப்படை விமானம் பெல்கோரோட் நகரின் மீது பறந்து கொண்டிருந்தபோது, விமான வெடிமருந்துகள் தற்செயலாக வெளியேற்றப்பட்டன" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால், இரண்டு ரஷ்யர்கள் காயமடைந்தனர். இதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், பெல்கோரோட் நகரத்தின் ஒரு முக்கிய வீதியின் குறுக்கே 20 மீ அளவுள்ள பள்ளம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கூறிய அந்த நகரத்தின் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், பெல்கோரோட்டில் அவசரகால நிலையை அறிவித்தார்.
details
நான்கு கார்கள் மற்றும் நான்கு கட்டிடங்கள் சேதம்
நான்கு கார்கள் மற்றும் நான்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரத்தை தாக்குவதற்காக இந்த வெடி மருந்துகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி 22:15 மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்த விபத்தால் காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், இன்னொரு பெண் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் தற்காலிகமாக ஹோட்டல்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று பெல்கோரோட்டின் மேயர் வாலண்டைன் டெமிடோவ் தெரிவித்துள்ளார்.