LOADING...
அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண் சாதனை! வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் தேனி பெண் ரிணி சம்பத் போட்டி
வாஷிங்டன் மேயர் தேர்தலில் களமிறங்கும் தேனி பெண் ரிணி சம்பத்

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண் சாதனை! வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் தேனி பெண் ரிணி சம்பத் போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 04, 2026
10:46 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யின் மேயர் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் தேனியில் பிறந்து, தனது 7வது வயதில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ரிணி சம்பத், வரும் விரைவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். இதன் மூலம், வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் களமிறங்கும் முதல் தெற்காசியப் பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். "அமெரிக்கக் கனவைத் தேடி வந்த நான், இன்று வாஷிங்டன் டி.சி. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போட்டியிடுவது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவு

4,500க்கும் மேற்பட்டோரின் ஆதரவுடன் தேர்தல் களத்தில்

மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற 4,500க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று ரிணி சம்பத் சாதனை படைத்துள்ளார். இது தேவையான எண்ணிக்கையை விட இருமடங்கிற்கும் அதிகமாகும். தெற்காசிய சமூகம் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தனது வேட்புமனு மற்றவர்களுக்கும் ஒரு உந்துதலாக அமையும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். 31 வயதான இவர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கத் தலைநகரில் வசித்து வருகிறார் மற்றும் ஒரு அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தேர்தல் வாக்குறுதிகள்

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு வெளிநபராக களம் காணும் ரிணி சம்பத், நகரின் அடிப்படைச் சேவைகளைச் சீரமைப்பதையே தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார். சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்தல், 911 அவசரச் சேவையின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல், பழைய உள்கட்டமைப்பால் ஏற்படும் கழிவுநீர் கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்புகளைத் தடுத்தல், மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் ஆகியவை இவரது முக்கிய வாக்குறுதிகளாகும். "ஏற்கனவே பதவியில் இருந்து தோல்வியடைந்தவர்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய அதிகாரவர்க்கத்திற்கு மாற்றாகத் தன்னை முன்மொழிந்துள்ளார்.

Advertisement

உழைப்பு

தேனி முதல் வாஷிங்டன் வரை: ஒரு குடும்பத்தின் உழைப்பு

தனது பொதுச் சேவை ஆர்வத்திற்குத் தனது தாத்தாவே மிக முக்கியக் காரணம் என்று ரிணி சம்பத் கூறியுள்ளார். தனது தந்தை எடுத்த துணிச்சலான முடிவால் அமெரிக்காவிற்கு வந்ததாகவும், இது தனக்குப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் கோட்டையான வாஷிங்டன் டி.சி.யில், வரும் ஜூன் 16, 2026 அன்று நடைபெறும் பிரைமரி தேர்தல் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும். அதில் வெற்றி பெற்றால், நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் மேயர் ஆகும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளது.

Advertisement