LOADING...
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!
மாஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் இது ஒரு "பெரிய படி" என்றும் டிரம்ப் கூறினார்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2025
08:52 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரின் பின்னணியில் மாஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் இது ஒரு "பெரிய படி" என்றும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியிடம் தான் கவலை தெரிவித்ததாகவும், இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போருக்கு நிதியளிக்க உதவும் என்று வாஷிங்டன் கருதுவதாகவும் டிரம்ப் அவரிடம் தெரிவித்ததாக கூறினார்.

உறுதி

சீனாவையும் நெருக்கவுள்ளதாக டிரம்ப் கூற்று

"இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை," என்று டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் (பிரதமர் நரேந்திர மோடி) இன்று ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய படியாகும். இப்போது சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்கப் போகிறோம்." எவ்வாறாயினும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தும் என்ற டிரம்பின் கூற்றை இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. டிரம்பின் கூற்றுப்படி, மோடியின் உத்தரவாதத்தைப் பெறுவது, ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைப்பதற்கான தனது ராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முடிவை சீனாவிடமும் செயல்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டாளி

மோடியும் - டிரம்பும் நெருங்கிய கூட்டாளிகள்

எரிசக்தி கொள்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பிரதமர் மோடி தனது நெருங்கிய கூட்டாளி என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். "அவர் என்னுடைய நண்பர். எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது," என்று கூறிய டிரம்ப், சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக பார்க்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தினார். அமெரிக்காவின் புதிய இந்தியத் தூதர் செர்ஜியோ கோர் பிரதமர் மோடியை சந்தித்த சில நாட்களுக்குப்பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து ANI கேள்வி எழுப்பியபோது,"மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிப்பதாக கூறினார்" என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் விலகுவது உடனடியாகச் சாத்தியமில்லை என்றாலும், அந்த மாற்றம் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.