வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்
கொரோனா காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறந்ததாக வந்ததிகள் பரவிய நிலையில், நேற்று ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் டெலாவேரில் உள்ள அவரது கடற்கரை வீட்டில், பல நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவரது மருத்துவர்கள் சோதித்ததில், பைடனுக்கு கோவிட் -19 இன் அறிகுறிகள் நீங்கிவிட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து அவர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து அவர், தனது நாட்டு மக்களுக்கு இன்று உரை நிகழ்த்தவுள்ளதாக கூறினார். பதவியிலிருந்து விலகும் முன், தன்னுடைய ஜனாதிபதி கடமைகளை எப்படி முடிப்பது என்று விளக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பைடன்
அதிபர் பைடன் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்ததாக அறிவித்து, நாடு முழுவதும் அரசியல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுவதும் ஜனாதிபதியாக தனது அனைத்து ஆற்றல்களையும் தனது கடமைகளில் கவனம் செலுத்துவேன்" எனத்தெரிவித்தார். மேலும் தனது முழு ஆதரவையும், ஒப்புதலையும், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். பைடனின் வயது மற்றும் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டிரம்பை எதிர்கொள்ளும் திறன் பற்றிய அழுத்தம் அதிகரித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.