அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 22 மே 2014இல் தாய்லாந்தின் ஆட்சியை கவிழ்த்து, தன்னை தானே ஆட்சியாளராக அறிவித்து கொண்டார் அப்போதைய இராணுவத் தளபதி பிரயுத் சான்-ஓச்சா. 2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்திய அவர், தனது பதவிக்காலம் தற்காலிகமானது மட்டுமே என்று உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்ததற்கு மாறாக அவரது ஆட்சி 9-ஆண்டுகள் தொடர்ந்தது. அவரது இராணுவ அரசாங்கம் 2017இல் ஒரு புதிய அரசியலமைப்பை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பின்படி, தாய்லாந்து ஜனநாயக நாடாக மாறினாலும், ஆட்சி கவிழ்த்தவர்களின் செல்வாக்கை பாதுகாப்பதற்காக 250-இடங்கள் கொண்ட செனட் நியமிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓச்சா கட்சி படுதோல்வி அடைந்தது
இந்த அரசியலமைப்பு, மக்களால் சேர்ந்தெடுக்கப்படுபவர்களை விட செனட்டில் உள்ளவர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியது. ஓச்சா ஒரு முரட்டுத்தனமான, சில சமயங்களில் வெறித்தனமான தலைவராக இருந்தார். அவரது முடிவுகளை எதிர்த்து பத்திரிகையாளர்கள் உட்பட யார் கேள்வி கேட்டாலும் சர்வாதிகார தன்மை கொண்ட அவருக்கு பிடிக்காது. இதனால், அவரது இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக பல இளம் போராட்டக்காரர்கள் உருவாக தொடங்கினர். இராணுவ ஆட்சியை ஒழிப்பதே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓச்சாவின் கட்சி படுதோல்வி அடைந்தது. இராணுவ ஆட்சியை விரட்டி அடிப்போம் என்று வாக்குறுதி அளித்த 'மூவ்-ஃபார்வேர்ட் கட்சி' பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து, தேர்தலில் படுதோல்வி அடைந்த ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.