ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஜப்பானில் தவறான எச்சரிக்கையால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க மையம்(EMSC) மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 140 முதல் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்கு பகுதியில் உள்ள வில்யுச்சின்ஸ்க் மற்றும் ஒசெர்னோவ்ஸ்கிய் பகுதிகளுக்கு அருகில் இந்த அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் அதிக ஆழத்தில் ஏற்பட்டதால், உடனடி சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியது. உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஜப்பான்
ஜப்பானில் ஏற்பட்ட தவறான எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தவறுதலாக ஒரு பெரும் பீதியை ஏற்படுத்தியது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தை ஆரம்பத்தில் தவறாக கணக்கிட்ட ஜப்பான் அமைப்பு, 6.9 அல்லது 7.0 அளவில் பதிவான நிலநடுக்கத்தை 9.9 ரிக்டர் அளவுகோல் கொண்ட மாபெரும் நிலநடுக்கமாகத் தெரிவித்து அவசர எச்சரிக்கையை வெளியிட்டது.
ஜப்பானின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கடுமையான நடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், அது நிலநடுக்கத்தின் அளவை மிகைப்படுத்தித்திவிட்டதாகத் தெரிவித்து எச்சரிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றனர்.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் உள்ள ஜப்பானில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பத் தவறால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.