'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
நேற்று(ஜூலை 13) புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது, புகழ்பெற்ற தமிழ் புலவரான திருவள்ளுவரின் சிலை பிரான்சில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரான்ஸின் மிக உயரிய 'கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்' என்ற விருது வழங்கப்பட்டது. இது அந்நாட்டு இராணுவ தளபதிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். இந்த விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
"தமிழ் மொழி உலகின் மிக பழமையான மொழி": பிரான்சில் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தை கொண்டாடும் வகையில், பிரான்ஸ் நாட்டில் வாழும் இந்தியர்கள் அவருக்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ் மொழி உலகின் மிக பழமையான மொழி. தமிழ் மொழி ஒரு இந்திய மொழி என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமை உண்டு. இந்தியா சார்பாக பிரான்ஸில் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட இருக்கிறது. திருவள்ளுவர் சிலையை பிரான்ஸில் அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்." என்று கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று கூறிய அவர், "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற திருக்குறளையும் குறிப்பிட்டு பேசினார்.